கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது இந்த கட்டுப்பாடுகளை இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கி அறிவித்துள்ளது.
அதன்படி பயணிகளுக்கு இடையே இருக்கைகளில் இடைவெளி தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் முன்புபோல பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக விமானப் பணிப்பெண்கள் அதற்குரிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த கட்டுப்பாடும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால் விமான பணிப்பெண்கள் வழக்கம் போல தங்களது வண்ண சீருடைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல விமான நிலையங்களிலும் பயணிகளை பரிசோதிக்கும் நடைமுறைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து எளிமையான முறையில் இருக்க கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விமான போக்குவரத்தில் முழுமையான இயல்பு நிலையை கொண்டு வந்துள்ளது.