விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு : அதிக பட்ச தண்டனைக்கு முதல்வர் உத்தரவு

சென்னை

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு இட்டுள்ளார்.

விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் உடன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் தெரிய வந்ததாவது : விருதுநகர் மாவட்டத்தில் தாயாருடன் குடியிருந்து வரும் 22 வயது இளம் பெண்ணிற்கு ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்ததை வீடியோ பதிவு செய்துள்ளார்.

அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள ஹரிஹரனை வற்புறுத்தினார்.  ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததினால் இளம் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்த போது, ஹரிஹரன் பதிவுசெய்த வீடியோ காட்சிகளைக் காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

அந்த வீடியோவினை அவரது நண்பர்களுக்கு சமூக ஊடகத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஹரிஹரனின் நண்பர்கள் வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளதும், ஹரிஹரன் இளம் பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் 8 பேர் குற்றவாளிகள் என தெரியவந்தது. ஹரிஹரன், மாடசாமி, ஜுனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரைக் கைது செய்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும். சிறார்கள். 18 வயதிற்கு உட்பட்ட இவர்கள் சிறார்கள் நீதிமன்றம் முன்பு முன்னிறுத்தப்பட்டு ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் ஜுனைத் அகமது என்பவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார்.  இதையொட்டி திமுக பொதுச்செயல துரைமுருகன் அவரை கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி தற்காலிக நீக்கம் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு, நேர்முகமாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பிரிவு தாக்கல் செய்யப்பட்டு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில் துணை காவல்துறை சூப்பிரண்டு அர்ச்சனாவிடம் புலன் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. மதுரை மண்டல ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோரும் விருதுநகரில் முகாமிட்டு புலன் விசாரணையை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.