வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 16-ம் தேதி இரவு காட்பாடியில் இருக்கும் ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்றார். நள்ளிரவு 1 மணிக்கு படம் முடிந்ததும் தான் பணிபுரியும் மருத்துவமனைப் பகுதிக்குச் செல்வதற்காக திரையரங்கம் முன்பு ஆட்டோவுக்காகக் காத்து நின்றனர்.
அப்போது வந்த ஒரு ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்த்து 5 பேர் இருந்தனர். ‘ஷேர் ஆட்டோ’ என்பதால், அந்தப் பெண்ணுக்கும் அவரின் ஆண் நண்பருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. வேலூர் புதிய பேருந்து நிலையத்தைக் கடந்ததும், ஆட்டோவில் இருந்த நபர்கள் திடீரென கத்தி முனையில் இருவரையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பாலாற்றுப் பகுதிக்குக் கடத்திச் சென்றனர். அங்கு வைத்து, அந்தப் பெண்ணை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமைச் செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 2 பவுன் நகை, செல்போன்களைப் பறித்த கும்பல் ஏ.டி.எம் கார்டையும் பறித்து, அதிலிருந்து ரூ.40,000 பணத்தையும் அபகரித்துக்கொண்டு தப்பியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் புகாரளிக்கப்பட்டது. புகாரின்பேரில், எஸ்.பி ராஜேஸ்கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கும்பலில், நான்குப் பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் 18 வயதுகூட பூர்த்தியாகாத சிறுவர்கள் எனத் தெரிவித்திருக்கும் வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணன், ‘‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்துள்ளார்.