வேலூரில் இரவு ரோந்து பணியின்போது சந்தேகத்துக்கு இடமான ஒரு கும்பலிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அக்கும்பல் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும் – சம்பந்தப்பட்ட பெண் பயத்தினாலும் குற்ற உணர்ச்சியாலும் அதை வெளியே சொல்லாமல் மறைத்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்பெண்ணிடம் புகார் பெறப்பட்டு, காவல்துறை அக்கும்பலை கைது செய்திருக்கிறது.
சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர், அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து முழு போதையில் இருந்த 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அந்த விசாரணையில் அவர்கள் கடந்த 3 நாட் களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையொன்றை சேர்ந்த பெண் ஊழியரை கூட்டு பலாத் காரம் செய்ததை கேட்டு காவலர்களுக்கு தெரியவந்துள்ளது. விவரத்தை முழுமையாக அறிந்து, இந்த வழக்கு தொடர்பாக இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் ஒரு புகார் மனு வரப்பெற்றுள்ளது. அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16.03.2022 – ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 01.00 மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும், அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும் , தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றதாகவும் , அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள், பணம் சுமார் ரூ.40,000 மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும், மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் , எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியுள்ளார் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக காவல் துறை கைதானவர்களிடம் மேலும் விசாரிக்கையில், இதன் உண்மைத்தன்மை அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதன்படி இவர்களை நள்ளிரவில் தியேட்டர் வாசலில் நோட்டமிட்ட 4 பேர், ஒரு ஆட்டோவில் சென்று `நீங்க எங்க போகணும்’ எனக் கேட்டு, “இது ஷேர் ஆட்டோ தான். நீங்களும் ஏறிக்கோங்க’’ என கூறியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். ஏற்க்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் `இங்கே ஏன் செல்கிறீர்கள்?’ என கேட்டுள்ளனர். அதற்கு ஆட்டோ ஓட்டுநர், `இவ்வழியில் சாலையை மறைத்து வேலை நடக்கிறது. அதனால் சுற்றி போகிறோம்’ என கூறியிருக்கிறார். அதன்பின்னர் சர்வீஸ் சாலையை கடந்த ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றிருக்கிறது.
அதன்பின்னர், அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அவர்களிடமிருந்து செல்போன்கள், ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றாதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாமல் இருந்திருக்கின்றனர். எதார்த்தமாக சத்துவாச்சாரி காவலர்கள் தங்கள் இரவு ரோந்துப்பணியின்போது நடத்திய விசாரணையில், இச்சம்பவம் தெரியவந்துள்ளது. தற்போது கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்து எஸ்.பி ராஜேஷ் கண்ணண் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
ஷேர் ஆட்டோ எனக் கூறி இருவரை கடத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவ ஆட்டோ பயணிகளிடையேயும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கையில், `வெளியே தெரிந்தால் அவமானம்’ `நமக்குதான் கெட்டபெயர்’ `நம்மைதான் குறை சொல்வார்கள்’ என நினைக்காமல், குற்றம் செய்பவர்களை சட்டத்தின்முன் துணிவோடு நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இங்கு தண்டிக்கப்பட வேண்டியதும், அவமானத்துக்கு உள்ளாக வேண்டியதும் சம்பந்தப்பட்ட குற்றத்தை செய்தவர்கள்தானே தவிர, பாதிக்கப்பட்டவர்கள் இல்லை!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM