பெங்களூரு:
ஹிஜாப் வழக்கில் கடந்த 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது.
மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து, சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.