கடந்த நான்கரை மாத இடைவெளிக்குப் பிறகு, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்ந்தது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) மொத்த டீசல் விலையை ஞாயிற்றுக்கிழமை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தியதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ரூ. 92.95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், நான்கு மாதங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை 45 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு 118.5 டாலராக உள்ளது,
இது எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், கடைசியாக எரிபொருள் விலையை திருத்தியபோது பேரலுக்கு $81.6 ஆக இருந்தது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.
சாதாரணமாக, பெட்ரோலியப் பொருட்களின் பெஞ்ச்மார்க் விலைகளின் 15 நாள் சராசரிக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன.
இருப்பினும், பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்த போது, எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் நவம்பர் 4 முதல் இரண்டு எரிபொருட்களின் விலையை நிலையானதாக வைத்திருந்தன.
குறிப்பாக இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி முதல் விலைகள் நிறுத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உச்சத்துக்கு சென்றது.
இந்நிலையில், சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், இப்போது பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
CRISIL ஆராய்ச்சியின்படி, சர்வதேச எண்ணெய் விலை உயர்வை முழுமையாகக் கடக்க லிட்டருக்கு ரூ.15-20 உயர்வு தேவைப்படுகிறது.
“ “