கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் பிர்மம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர், கொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதில், 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பான்ர்ஜிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. மம்தா பானர்ஜியை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மத்திய விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வன்முறை நடந்த போக்துய் கிராமத்திற்கு சென்று, நிலைமையை நேரில் ஆய்வு செய்யப்போவதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, ‘நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது, நமது அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் செய்யும் முயற்சியாகும். பிர்பம் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது, அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே காவல்துறை பொறுப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை நீக்கியுள்ளோம்’ என்றார்.
“நான் நாளை அங்கு (போக்துய் கிராமம்) செல்ல உள்ளேன். இன்றே அங்கு சென்றிருப்பேன், ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகள் அந்த இடத்திற்குச் செல்கின்றன. அவர்கள் (எதிர்க்கட்சித் தலைவர்கள்) அங்கு சூழ்ந்திருக்கும்போது நான் அந்த இடத்திற்குச் செல்ல விரும்பவில்லை. நான் எந்த மோதலிலும் ஈடுபட விரும்பவில்லை’ என்றும் மம்தா குறிப்பிட்டார்.