மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பிர்ஹாம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் பாது ஷேக். திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகியான இவர், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்புர்ஹாட் கிராமத்தில் நேற்று திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கிருந்த சில வீடுகளை பூட்டிவிட்டு அவற்றுக்கு சமூக விரோதிகள் சிலர் தீ வைத்தனர். இதில் 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், “ராம்புர்ஹாட் கிராமத்தில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நிகழ்வு குறித்து தகலவறிந்ததும் அந்தப் பகுதியில் இருந்த காவல்துறை உயரதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டேன். நாளை அந்தப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளேன். இதே போன்ற சம்பவங்கள் ராஜஸ்தான், குஜராத்திலும் நடந்திருக்கின்றன. இப்படி கூறுவதால், இந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்தவில்லை. இதுதொடர்பாக நியாயமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இதில் எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் அரசியல் செய்கின்றன” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM