மூன்று வருடங்களாகக் காத்திருந்து, கோவிட் காரணமாகத் தள்ளிச்சென்று, தற்போது இறுதியாக மார்ச் 25-ம் வெளிவர இருக்கிறது ஆர் ஆர் ஆர் திரைப்படம். ராம் சரண் தேஜா, ஜூனியர் NTR, ஆலியா பட் என முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கின்றனர். இயக்குநர் ராஜ மௌலி மற்றும் குழுவினர் இணைந்து பெரும் பொருட் செலவில் படம் தயாராகி இருக்கிறது. படக்குழுவினரின் நேர்காணல் இதோ…
“பல வருடங்கள் கழித்து திரைப்படம் வெளிவர இருக்கிறது. தற்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?”
ராஜமௌலி : “இத்திரைப்படம் 2020-ல் வெளிவந்திருக்க வேண்டும். கோவிட் காரணமாக தள்ளிப் போய் ஒருவழியாக தற்போது வெளிவர இருக்கிறது. கடைசியாக ரிலீஸ் ஆக போகுதே என்பதே ஒரு நிம்மதியாகத்தான் இருக்கிறது. ஆனால் படத்தை வெற்றி படமாக்குவதும் தோல்வி படமாக்குவதும் நம் கைகளில் இல்லை. அது ஆடியன்ஸ் கைகளில் தான் உள்ளது. அதனால் தற்போது படம் வெளிவர இருக்கிறதே என்று நிம்மதியாகவும் உள்ளது. அதே போல் படத்தை மக்கள் எவ்வாறு வரவேற்கப் போகிறார்கள் என்று ஒரு அச்சமும் உள்ளது. பதட்டமும் நிம்மதியும் கலந்த ஒரு மனநிலையில்தான் தற்போது உள்ளேன்.”
ஜூனியர் NTR : “இந்த பேன்டமிக் காலத்துல தியேட்டர்கள் எல்லாம் மூடிவைத்து, தியேட்டர் ஓனர்களும் பெரும் நட்டத்திற்கு ஆளானார்கள். அது ஒருபுறமிருக்க ரசிகர்களுமே பெரிய படம் வராதா, மீண்டும் பழைய மாதிரி தியேட்டர் போய் பார்க்க மாட்டோமோ என்று ஏங்கி போனாங்க. இந்த ஏக்கத்தையெல்லாம் உடைச்சு இவங்க எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் படம்தான் ஆர் ஆர் ஆர். நானும் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்தால் பெரிய ஸ்கிரீனில் தான் பார்க்க வேண்டுமென்று காத்திருக்கேன்.”
“நீங்க இரண்டு பேருமே தெலுங்கு சினிமாவின் இரு வேறு துருவங்கள். ஒவ்வொருவருமே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிங்க. அப்படி இருக்கும்போது இந்த திரைப்படத்தை உங்க ரசிகர்கள் எல்லாம் எப்படி வரவேற்பார்கள் என்று நினைக்குறீங்க?”
ஜூனியர் NTR : “நாங்க ரெண்டு பேரும் இந்த படத்திற்காக என்று இல்லை. இதற்கு முன்னாடியே நாங்க சிறந்த நண்பர்கள்தான். நான் என்னுடைய படம் வந்தால் ராம் வீட்டிற்கு தான் சென்று பார்ப்பேன். அவர் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கெல்லாம் என் வீட்டிற்குத் தவறாமல் வருவார். ஆனால் நாங்கள் இருவரும் என்னதான் நண்பர்களா இருந்தாலும் எங்களுக்குள் போட்டி என்பது எப்போதுமே இருக்கும். ஆனால் அது ஆரோக்கியமான நட்பான போட்டியாகத்தான் இருக்கும். எங்களுடைய பிரதிபலிப்புதான் எங்கள் ரசிகர்களும். நாங்கள் எப்படி இருப்போமோ அப்படிதான் அவர்களும் இருப்பார்கள்.”
“பல்வேறு நட்சத்திரங்கள் தெலுங்கு சினிமாவில் இருப்பினும் குறிப்பாக இவர்கள் இருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்த காரணம் என்ன?”
ராஜமௌலி : “நான் ஏற்கெனவே இவர்கள் இருவரிடம் பணிபுரிந்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே எனக்கு நெருக்கமானவர்களும்கூட. ராம் சரணை பொறுத்தவரை நான் எது சொன்னாலும் அதைப் பற்றி யோசிக்காமல் அதை அப்படியே செய்துவிடுவார். இயக்குநர்களின்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைதான் அதற்குக் காரணம். ரங்கஸ்தளம் படத்தில்கூட அதேபோல தான் அவர் செய்திருப்பார்.
NTR -ஐ பொறுத்தவரை நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை முன்கூட்டியே அவர் அறிந்துவிடுவார். அவர் சூப்பர் கம்ப்யூட்டர் போல. நம் எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்வார்.”
“உங்களுடைய கேரக்டரான `அல்லூரி சீத்தாராமா ராஜூ’ என்பது ஏற்கெனவே நிறைய பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அது ஒரு உண்மை கதாப்பாத்திரமும்கூட. அதனால் கண்டிப்பாக எதாவது புதுமை நீங்கள் புகுத்தவேண்டும். அப்படி நடிக்கும்போது அந்த சேலஞ் உங்களுக்கு எப்படி இருந்தது?”
ராம் சரண் : “கதையை முதலில் கேட்கும்போது இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சேலஞ்சிங்காகத்தான் இருக்க போகிறது என்று தோன்றியது. ஏனென்றால் அவரை குறித்து ஒரு பையோபிக் வந்திருக்கு. அல்லூரி சீத்தாராம ராஜூ குறித்து எல்லோருக்குமே தெரியும். ஆனால் இயக்குநர் ராஜமௌலி இதை இயக்கும்போது முற்றிலுமாக ஒரு புதிய பரிணாம கதையாக இருந்தது. நடிக்கும்போது எனக்குப் பெரிதாக வேறொருவரின் சாயல் ஓட்டி விடுமே என்று எந்தவொரு சிரமுமே இல்லை. இது முற்றிலுமாக அவருடைய கதையாக இருந்தது. அதில் கதாப்பாத்திரங்களாக நாங்கள் நடித்தோம் என்பது போலத்தான் இருந்தது.”
ஜூனியர் NTR : “படத்தினுடைய ட்ரைலர் வெளிவரும்போதே நீங்கள் பாத்திருக்கலாம். ராஜமௌலி ட்வீட்டில் #myram #mybheem போன்று தான் போட்டிருப்பார். என்னை பொறுத்தவரை எனக்கு ரெபரன்ஸ் எதுவும் இல்லை. ஆனால் அது எனக்குத் தேவைபடவும் இல்லை. என் இயக்குநர் என் கதாப்பாத்திரத்திற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தந்துவிட்டார். அதை ஏற்று நடிக்கவேண்டியதுதான் என் பொறுப்பாக இருந்தது. அதனால் இத்திரைப்படத்தில் முந்தைய காலத்தில் வெளிவந்த அல்லூரி சீத்தாராம ராஜூ சாயலோ அல்லது கோமரம் பீமின் சாயலோ இருக்காது. முற்றிலுமாக ராஜமௌலியின் ராமாகவும், பீமாகவும்தான் இருக்கும்.”
“இயக்குநர் ராஜமௌலி மிகவும் கண்டிப்பானவர் என்று கேள்விபட்டோமே. அது குறித்து…”
“இயக்குநர் ராஜமௌலி நினைத்ததைச் செய்துவிடவேண்டும் என்று துடிப்போடு உள்ளவர். ஒரு நாளில் 10 டேக் எடுக்க வேண்டுமென்றால் பத்து டேக் எடுத்தே தீருவார். அவருக்கு வேலையின்போது உறக்கம் என்பதே கிடையாது. அதனால் அவருடன் நடிக்கும்போது சிரமமாகவே இருக்கும். அவர் ஒரு கண்டிப்பானவர் என்று சொல்வதைக்காட்டிலும் ஒரு பெர்பக்ஷனிஸ்ட் என்று சொல்லலாம். தாம் செய்யும் எந்தவொரு விஷயமும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அதனால்தான் அவர் கண்டிப்பானவராக இருக்கிறார்.”