புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 15 பேர் பள்ளி சீருடையுடன், கையில் மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். மாணவர்கள் வைத்திருந்த அந்த மனுவில், “பள்ளியில் எங்கள் வகுப்புகளுக்குப் பாடங்கள் நடத்த ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாணவர்கள் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து, மாணவர்கள் இந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவிடம் அளித்தனர்.
இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது, “எங்கப் பள்ளியில் பிளஸ்-2 வணிகவியல் பிரிவில் தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கையியல் உள்ளிட்டப் பிரிவுகள் இருக்கு. இதுல, கணக்குப்பதிவியல், வணிகவியல், தணிக்கையியல் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால இந்த 3 பாடங்களும் நடத்தப்படுறதில்லை. வணிகவியல் பாடத்திற்கு மட்டும் 10-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவ்வப்போது வந்து பாடம் நடத்துவாரு.
திருப்புதல் தேர்வுக்கு அடுத்து, இன்னும் கொஞ்ச நாள்லயே, பொதுத்தேர்வு வர இருக்கு. அதற்குள்ள நாங்க பாடங்களை படிச்சி முடிக்கணும். பாடம் நடத்துறதுக்கு ஆசிரியரே இல்லைன்னா எப்படி நாங்க பொதுத்தேர்வு எழுதுறது.
நாங்க இந்த 3 பாடங்களையும் முழுமையாக படித்து பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சிபெறுவோமா என்று தெரியலை” என்றனர்.
மாணவர்களிடமிருந்து மனுவினைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதற்கிடையே மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்க அனுமதி வாங்கியபோது, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வதாகக் கூறியும், அதற்கான நடவடிக்கையை தலைமையாசிரியர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்காத மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அரங்கசாமியை (58) பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூா்த்தி உத்தரவிட்டார்.
தற்போது இந்தப் பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வுக்கு தயாராக 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.