காபூல்: ஆப்கனில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தற்போதைக்கு நீக்குவதில்லை என தலிபான் ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். கடந்த முறை ஆட்சி செய்தது போல் அல்லாமல் இந்த முறை பெண்களுக்கு அவர்களது உரிமைகளை அளிப்போம் என தொடக்கத்தில் உறுதி அளித்தனர். ஆனால் வெகு விரைவிலேயே அதற்கு மாறான அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கினர்.
ஆப்கனில் தலிபான்கள் அதிகாரத்துக்கு வந்தது முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளி செல்ல தடை விதிக்கப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் இந்தஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட்டன. ஆனால் தலிபான்களின் ஆணைகள் ஒழுங்கற்றவையாக இருந்ததால் பெரும்பாலான மாகாணங்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான கல்வி நிறுவனங்களை மூடியுள்ளன.
பெண்களுக்கு கல்வி நிலையங்களை திறக்கவும் பொது இடங்களில் பெண்களுக்கான உரிமையை வழங்கவும் தலிபான் தலைவர்களை சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் புதிய கல்வி ஆண்டு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலிபான் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆப்கனில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும். அதை நீக்குவது தொடர்பான முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
சர்வதேச அளவில் கண்டனம்
அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரலாம் என ஆப்கன் கல்வி அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், அதற்கு மாறான இந்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பெண் கல்விக்கு எதிரான தலிபான்களின் இந்த முடிவுக்கு சர்வதசே அளவில் கண்டனங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.