காபூல் : தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 1996 முதல் 2001 வரை, தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது, பெண்கள் படிக்கவும், ஆண் துணையின்றி வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 6ம் வகுப்புக்கு மேல் படிக்க, சிறுமியருக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், புதிய கல்வியாண்டு துவங்கி உள்ளதால், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
தலிபான் ஆட்சியாளர்கள் பள்ளிகளில் சிறுமியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து, 6ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவியர், தங்கள் பள்ளிகளுக்கு நேற்று காலை மகிழ்ச்சியுடன் சென்றனர். எனினும், அடுத்த சில மணி நேரத்தில், தலிபான்கள் தங்கள் முடிவை மாற்றினர். பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேல் பயிலும் சிறுமியருக்கு மீண்டும் தடை விதிக்கப்படுவதாக அவர்கள் அறிவித்தனர்.
பின், ஆசிரியர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, மாணவியர் அனைவரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தலிபான் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கைகக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement