ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் விவகாரங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கருத்து தெரிவித்த எந்த அதிகாரமும் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய ஒத்துழைப்பில் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, காஷ்மீர் பற்றி குறிப்பிட்டு இருந்தார். காஷ்மீர் தொடர்பாக இஸ்லாமிய நண்பர்கள் பலரின் அழைப்புகளை மீண்டும் கேட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சீனாவும் அதே நம்பிக்கையை பகிர்ந்து கொள்கின்றது என்றும் பேசியுள்ளார். சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்தை ஏற்கனவே இந்தியா நிராகரித்து இருந்தது.இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இது போன்ற குறிப்புகளை இந்தியா எப்போதும் நிராகரிக்கிறது. எங்கள் நிலைப்பாடு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும் என்றார். இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து பொது பேச்சுக்களை சீனா தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்திய சீனா, நிலைமையை சிக்கலாக்கும் எந்த ஒரு தலைப்பட்ச நடவடிக்கையையும் எதிர்ப்பதாக தெரிவித்தது. இந்த நிலையில் ஜம்மு – காஷ்மீர் உள் விவகாரம் என்றும் பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ பேசியதை நிராகரிப்பதாகவும் இந்தியா இன்று மீண்டும் கூறியுள்ளது.