பிர்பும்: ‘பிர்பும் வன்முறை ஒரு பெரிய சதி’ எனக் கூறியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘காவல்துறை அனைத்துக் கோணங்களிலும் இந்த வழக்கை விசாரிக்கும்’ என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பிர்பும் கிராமத்திற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை சென்றார். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மம்தா, ‘கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார். அவர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கினார்.
தொடர்ந்து கலவரத்தில் எரிந்த போன வீடுகளை சரிசெய்ய ரூ 1 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அங்கிருந்தவர்கள் ‘அவை போதுமானதாக இல்லை, கூடுதல் தொகை வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். உடனடியாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
பின்னர் பேசிய மம்தா பானர்ஜி,” நவீன பெங்காலில் இந்த மாதிரியான காட்டுமிராண்டித்தனம் நடக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தாய்மார்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்திருக்கிறார்கள். ஆனால், என்னுடைய இதயம் வலிக்கிறது.
இந்தச் சம்பவத்திற்கு பின்னால் ஒரு பெரிய சதி இருக்கிறது. போலீஸார் இந்தக் கொலைகள் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்துவார்கள். ராம்பூர்ஹாட் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதை காவல்துறை உறுதி செய்யும். குற்றவாளிகள் எந்த வகையிலும் தப்பித்து விடாத வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
குற்றச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் சரணடைந்து விடுங்கள். இல்லை என்றால் சந்தேக நபர்கள் வேட்டையாடப்படுவார்கள். மக்கள் தப்பி ஓடிவிட்டார்கள் என சாக்கு சொல்வதை நான் விரும்பவில்லை. இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறையினர் தர வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கிருந்த உயர் காவல்துறை அதிகாரியை அழைத்த முதல்வர் மம்தா, புகார்களுக்கு பதிலளிப்பதில் அலட்சியமாக இருக்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து இந்தக் கொலைகள் தொடர்பாக உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய உத்தவிட்டார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர் ஒருவர் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு சிபிஜ விசாரணை வேண்டும் எனக் கோரிய பாஜக, முதல்வரை பதவி நீக்கம் செய்து, மாநிலத்தில் குடியரசுத் தலைர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியது.
முன்னதாக புதன்கிழமை, இந்தச் சம்பவத்தில் கட்சி பாகுபாடு இன்றி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் மம்தா தெரிவித்திருந்தார். கைது செய்யப்பட்டவர்களில், கொல்லப்பட்ட பஞ்சாயத்து துணைத் தலைவரின் மகன்களும் அடக்கம் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.