பொதுவாக ஆரஞ்சு பழம் இயற்கையாகவே உடலுக்கு பலவகையான நன்மைகளைக் கொண்டுள்ளது.
குறிப்பாக அதன் பலமே விட்டமின் சி தான். ஆனால் அது பழத்தைக் காட்டிலும் தோலில்தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதன் கசப்புத் தன்மையால் சாப்பிட முடியாத காரணத்தால் இதனை பலரும் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
உண்மையில் இதன் தோல் சருமத்திற்கு பலவகையில் நன்மை தருகின்றது.
தற்போது ஆரஞ்சு பழ தோலினை எப்படி எல்லாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
- ஆரஞ்ச் பழ தோலை வெயிலில் நன்றாக காய வைத்து மிக்சியில் பவுடர் போல அரைத்து எடுத்தால், ஆரஞ்ச் தோல் பவுடர் ரெடி. காற்று புகாத டப்பாவில் இந்த பவுடரை 15 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
- ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடர், 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் கப் தேய்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும். வெயில் படும் இடங்களில் எல்லாம் இந்த கலவையை பயன்படுத்தலாம்.
- 2 ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடர், ஒரு ஸ்பூன் லெமன் சாறு மற்றும் சந்தன பவுடரை கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலக்க வேண்டும். அதனை முகம், கைகளில் தேய்த்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு முகத்தை நன்றாக கழுவி விடவும். இதனால் முகத்தில் எண்ணெய் வடிவது மற்றும் முகப்பரு குறையும்.
- ஒரு ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடருடன் இரண்டு ஸ்பூன் தயிரை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களில் முகத்தை கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். தயிர் முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும். ஆரஞ்ச் பவுடருடன் சேரும் போது இன்னும் பல நன்மை தரும்.
- 2 ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடரில் தேவையான அளவுக்கு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். பொதுவாகவே ரோஸ் வாட்டரை முகத்தில் தினமும் இரவில் தூங்கும் முன் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால், முகம் சற்று புத்துணர்ச்சி பெறும்.