இலங்கைத் தூதுவர் ஈரான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவருடன் சந்திப்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவர் ஜி.எம். விபுலதேஜ விஸ்வநாத் அபோன்சு, ஈரான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் அப்டோல்நேசர் டெரக்ஷனை 2022 மார்ச் 13ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்தார்.

பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் தூதுவரை வரவேற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் இருதரப்புத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான பெறுமதியான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். வர்த்தகம், தொழில், விவசாயம், எரிசக்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இராஜதந்திர மற்றும் பாராளுமன்ற உறவுகளை மேலும் சுறுசுறுப்பாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இலங்கையும் ஈரானும் சிறந்த நண்பர்கள் என்றும், குறிப்பாக மனிதாபிமான வர்த்தகம், விவசாயம், சுற்றுலா, உயர்கல்வி, இளைஞர்கள் விவகாரம், விளையாட்டு, எரிசக்தி, ஆற்றல், கலாச்சாரம் மற்றும் கலை ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பின் சாத்தியமான அனைத்து துறைகளிலும் செயற்பட்டு வருவதாகவும் தூதுவர் விஸ்வநாத் அபோன்சு வலியுறுத்தினார்.

2017 இல் இலங்கை சபாநாயகர் ஈரானுக்கும் 2018 இல் ஈரான் சபாநாயகர் இலங்கைக்கும் மேற்கொண்ட அண்மைய விஜயங்களையும் தூதுவர் நினைவு கூர்ந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்றப் பரிமாற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றை சுட்டிக்காட்டி நட்புறவுக் குழுக்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், ஈரான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழு மீண்டும் புத்துயிர் பெறும் எனக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் டெரக்ஷன், பரஸ்பரம் வசதியான திகதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்கு குழு உறுப்பினர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலளித்த தூதுவர் விஸ்வநாத் அபோன்சு, ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை வலுப்படுத்துவதற்காக விஜயங்கள் மற்றும் அதிகரித்த தொடர்புகளை உள்ளடக்கிய ஒரு வேலைத் திட்டத்தை ஈரானியத் தரப்பிடம் கோரினார். கூட்டத்தின் நிறைவில், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுக்காக தன்னை அழைத்ததற்காக ஈரான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் அப்டோல்நேசர் டெரக்ஷனுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

நட்புறவுக் குழுவின் உறுப்பினர் ஃபதேமே ரஹ்மானி, ஈரான் வெளியுறவு அமைச்சின் நிபுணர் முகமது டெல்தாரி மற்றும் குழுவின் செயலாளர் சல்மான் பாபாய் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2022 மார்ச் 23

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.