மக்கள் வங்கி திவாலாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச பதில் வழங்கியுள்ளார்.
குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மக்கள் வங்கி நெருக்கடியில் உள்ளது என்பது அப்பட்டமான பொய். இந்த நாட்களில் நாட்டில் டொலர் தட்டுப்பாட்டுடன் இரண்டு அல்லது மூன்று கடன் கடிதங்கள் சிக்கித் தவித்தன.
ஆனால் இன்று தேவையான டொலர்கள் மத்திய வங்கியினால் வழங்கப்படுகின்றன.
அந்த பிரச்சனை இன்று முடிந்துவிட்டது. இங்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இவை முற்றிலும் பொய்யான பிரச்சாரம்.
கவலைப்படத் தேவையில்லை, மக்கள் வங்கி ஒரு பிரச்சனையான நிறுவனம் அல்ல. மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இவ்வாறான போலி பிரச்சாரங்கள்” முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னதாக நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இலங்கையிலுள்ள அரச வங்கியொன்று வங்குரோத்து அடைந்துள்ளதாக கூறியிருந்தார்.
“அரச வங்கியொன்று இவ்வாறு வங்குரோத்து நிலையில் இருந்தால், அது ஒரு பேரழிவாகவும், ஒரு பேரழிவின் தொடக்கமாகவும் இருக்கலாம்” என அவர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.