சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக் குடிமக்கள் அன்றாடச் செலவினங்களைக்கூட எதிர்கொள்ள முடியாது, வறுமைக்கும், ஏழ்மைக்கும் உள்ளாகி, தவித்து வருகிற செய்திகள் கவலை அளிக்கின்றன.
சிங்கள இனவெறிப் பிடித்து, தமிழர்களை அழித் தொழிக்க, உலகெங்கும் கடன்களை வாங்கிக்குவித்து, நாட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிலும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தாத கொடுங்கோல் சிங்கள ஆட்சியாளர்களின் இனவெறி செயல்பாடுகளே இத்தகைய நிலைக்கு காரணம் என்றாலும், இன்றைக்கு தமிழர்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகி நிற்பது பெரும் மனவேதனையைத் தருகிறது.
இவ்வளவு ஆண்டுகளாக, சிங்கள ஆட்சியாளர்களின் இன ஒதுக்கல் நடவடிக்கைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, கொடும் துயரத்திற்கு ஆளாகி நின்ற தமிழ் சொந்தங்கள், இப்போது பொருளாதார நெருக்கடியினாலும், வறுமையின் கோரப்பிடியினாலும் வாடி வதங்கி, வாழ்க்கையை நடத்த முடியாத துயர்மிகு சூழலில், நாளும் அல்லல்பட்டு வருவது பெரும் மனவலியைத் தருகிறது.
இத்தகைய கையறு நிலையில், தாய்த்தமிழகத்தில் தஞ்சம்கேட்டு, கடல்வழியாக, படகுகளின் மூலம் அடைக்கலம் தேடிவரும் ஈழச்சொந்தங்களை வழக்குகள் போட்டு கைது செய்வது மேலும் துன்பத்திற்குள்ளாக்குவது கொடுமை. அதிலும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து சிறையிலும் முகாம்களிலும் அடைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அனைத்தையும் இழந்து வரும் நம்மக்களை ஆரத் தழுவி அரவணைத்து, திபெத்திய ஏதிலிகளுக்கு இந்நாடு வழங்கியிருக்கிற சலுகைகளையும், வசதிகளையும் போல, நம் சொந்தங்களுக்கும் செய்து கொடுத்து, அவர்களைக் காக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை- சமையல் கியாஸ் விலை ரூ.13,680