கொழும்பு:
இலங்கையில் அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது.
இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் இலங்கைக்கு அனைத்து நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அடியோடு நின்றது. இதனால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தேயிலை ஏற்றுமதி மூலமும் இலங்கைக்கு அதிக வருமானம் கிடைத்தது. ஆனால் கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு தேயிலை உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேயிலை உற்பத்தியும் 20 சதவீதம் பாதிக்கப்பட்டதால் ஏற்றுமதியிலும் சிக்கல் உருவானது.
இப்படி பல முனைகளிலும் வருவாய் இழப்புகள் ஏற்பட்டதால் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்த நெருக்கடியில் இருந்து மீள இந்தியா உள்பட பல நாடுகளில் கடன்உதவி கேட்டு கை ஏந்தும் நிலைக்கு இலங்கையின் சூழ்நிலை மாறி விட்டது.
அரிசி, பால், காய்கறி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. பெட்ரோல்-டீசல், மண்எண்ணை, சிலிண்டருக்காக பொதுமக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றனர்.
ஆனாலும் கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பலர் பெட்ரோல், டீசல், சிலிண்டர் கிடைக்காமல் திரும்பி செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. டீசல் கிடைக்காததால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் பயிர்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன.
எரிபொருள் தட்டுப்பாட்டால் கடுமையான மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பலமணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
சிலிண்டர் கிடைக்காததாலும் சமைக்க விறகு இல்லாததாலும் பல வீடுகளில் சமையல் பணி முடங்கி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். பாலுக்கும், ரொட்டி துண்டுக்கும் அவர்கள் அலைந்து திரிந்து வருகின்றனர்.
ஒருபுறம் விலைவாசி உயர்வு, மறுபுறம் அத்தியா வசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கி விட்டனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி மந்திரி பசில் ராஜபக்சே தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம்தான் நடந்து வருகின்றன.
தற்போது இலங்கை மக்களின் கோப பார்வை ராஜபக்சே குடும்பத்தினர் மீது திரும்பி உள்ளது. நுகே கொட பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கலந்து கொண்டனர். அவர்கள் தெல்கட சந்தியில் இருந்து நுகே கொட சந்தி வரை பேரணியாக சென்றனர்.
அப்போது அவர்கள் ராஜபக்சே குடும்பத்தினரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். பொதுமக்களை துன்புறுத்தும் அரசை விரட்டி அடிக்கும் வரை போராடுவோம் என கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தின் போது பேசிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார், ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியை விட்டு செல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.
இந்த போராட்டத்தின் காரணமாக நுகே கொடாவில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதேபோல இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் பொதுமக்கள் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையோ கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் அவர்களும் எரி பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் அவர்கள் பயணம் செய்யும் அவல நிலையும் நீடிக்கிறது.
இதன் காரணமாக சிறந்த சுற்றுலா இடம் என உலக மக்களால் கருதப்பட்ட இலங்கை தற்போது அதன் தனித்துவத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்…உக்ரைனில் இருந்து வெளியேற மறுக்கும் இந்திய கன்னியாஸ்திரிகள்