இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும். இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்டின் முதல் காலாண்டில் 260,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையை விட அதிகமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்கு சுற்றுலாத்துறையின் சகல பிரிவுகளும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக இலங்கையை மாற்றுவதற்கு வேலைத்திட்டம்…
இவ்வருட இலக்கு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்…
துறை சார்ந்த பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் …
விமானப் பயண எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம்…
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை…
சுற்றுலாத் துறை தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி …
ஜனாதிபதி பணிப்புரை
இல 80, காலி வீதி, கொழும்பு 03 இல் அமைந்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையை இன்று (24) முற்பகல் பார்வையிட்டபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
திட்டமிட்டமுறையிலும் முறையான சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தின் ஊடாகவும் விரைவான பொருளாதார அபிவிருத்திக்காக 1966 இல் சுற்றுலா சபை ஸ்தாபிக்கப்பட்டதோடு, 2005 இல் அது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையாக மாற்றப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருதல், தங்குமிடம் மற்றும் ஓய்வு விடுதிகளைத் திட்டமிடல், சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் உள்ளிட்ட சுற்றுலா சேவைகளைப் பதிவு செய்தல் மற்றும் வகைப்படுத்துதல், உரிமங்களை வழங்குதல் உள்ளிட்ட சுற்றுலாத் கைத்தொழிலுடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் மேற்பார்வையிட சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி நிறுவனம் மற்றும் மாநாட்டு பணியகம் என்பனவற்றை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊழியர்களை பாராட்டினார்.
சுற்றுலாத்துறையில் இருந்து ஆண்டுக்கு 10 பில்லியன் டொலர்களை திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் சுற்றுலாத்துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது கொவிட் தொற்றுநோயால் மேலும் வீழ்ச்சியடைந்தது. உரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது.
தடுப்பூசி வேலைத்திட்டத்தின் வெற்றியினால் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப பயிற்சிகளை விரிவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நாடு முழுவதும் வியாபித்துள்ள ஹோட்டல் கட்டமைப்பின் உதவியுடன் இளைஞர்களுக்கு நடைமுறை ரீதியிலான பயிற்சி மற்றும் கோட்பாட்டு அறிவையும் வழங்கத் திட்டமிடுவதன் மூலம் பாரியளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறையை வீழ்ச்சியடையச் செய்வதற்கு பல்வேறு வகையான திட்டமிட்ட பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பின்னணியிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகவே உள்ளது. வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்நாட்டில் கால் வைத்தது முதல் மீண்டும் திரும்பிச் செல்லும் வரை உயர்தர விருந்தோம்பலுடன் கவர்ச்சிகரமான சேவையை வழங்குவது சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடி இலங்கைக்கான விமானப் பயண எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
யால, குமண, மின்னேரியா மற்றும் ஏனைய பூங்காக்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை சுற்றுலாத் தலங்களாகப் பேணுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-03-24