கீவ்: ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான இன்சைடரைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், கீவ் நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு பலியானார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒக்சனா பவுலினா. ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான தி இன்சைடரில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார். ஒக்சனா புதன்கிழமை கீவ் நகரின் போடில் மாவட்டத்தில் ரஷ்ய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களைப் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் சாமானியர் ஒருவரும் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என ‘தி இன்சைடர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்சனா பவுலினாவின் மரணம் குறித்து ‘தி இன்சைடர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒக்சனா ‘தி இன்சைடர்’ நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பாக, ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னி ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையில் பணிபுரிந்து வந்தார். அந்த அறக்கட்டளை தீவிரவாதிகளின் அமைப்பு என ரஷ்ய அதிகாரிகளால் முத்திரை குத்தப்பட்டபோது ஒக்சனா ரஷ்யாவில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்பு ரஷ்யா உக்ரைனில் ஆக்கிரமிப்பு தாக்குதல் தொடங்கியதில் இருந்து, தலைநகர் கீவ், மற்றும் கிவி நகரத்தில் இருந்து தொடர்ந்து தாக்குதல் குறித்த பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஒக்சனாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்களை ‘தி இன்சைடர்’ தெரிவித்துக் கொள்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
ஒக்சனாவின் பணிபுரிந்த சக பத்திரிகையாளர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நவல்னி குழுவில் அவருடன் பணிபுரிந்த விளாடிமிர் மிலோவ், தனது ட்விட்டர் பதிவில், ‘அவரை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாரும் நீதியிடமிருந்து தப்பிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் பணிபுரிந்த மற்றொருவரான லியுபோவ் சோபோல், ‘இது ஒரு நம்ப முடியாத அதிர்ச்சி’ என தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான செர்ஜி டோமிலென்கோ முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்சனாவின் மரணத்தை உறுதி செய்துள்ளார். மேலும், முற்றுகையில் உள்ள தெற்கு மரியுபோல் நகரின் உள்ளூர் தொலைகாட்சி நிலையத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ரஷ்யா குண்டுவீச்சுத் தாக்குதலில் அமெரிக்க வீடியோ கிராபர், பிரெஞ்சு – ஐரிஷ் ஒளிப்பதிவாளர் மற்றும் உக்ரைனின் செய்தியாளர் ஆகியோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.