மாஸ்கோ
ரஷியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒக்சனா பவுலினா. ரஷியாவின் புலனாய்வு இணையதளமான தி இன்சைடரில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார்.
ஒக்சனா புதன்கிழமை கீவ் நகரின் போடில் பகுதியில் ரஷிய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களைப் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷியப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என ‘தி இன்சைடர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்சனா பவுலினாவின் மரணம் குறித்து ‘தி இன்சைடர்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“ஒக்சனா ‘தி இன்சைடர்’ நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு முன்பாக, ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னி ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையில் பணிபுரிந்து வந்தார். அந்த அறக்கட்டளை பயங்கரவாதிகளின் அமைப்பு என ரஷிய அதிகாரிகளால் முத்திரை குத்தப்பட்டபோது ஒக்சனா ரஷியாவில் இருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்பு ரஷியா உக்ரைனில் ஆக்கிரமிப்பு தாக்குதல் தொடங்கியதில் இருந்து, தலைநகர் கீவ் நகரத்தில் இருந்து தொடர்ந்து தாக்குதல் குறித்த பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஒக்சனாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை ‘தி இன்சைடர்’ தெரிவித்துக் கொள்கிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.