உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் போர்நிறுத்தம் தொடர்பாக ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிராக 3 முறை வாக்கெடுப்பு நடத்தியும், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் முதலாவதாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு எதிராகப் பெரும்பான்மை இருந்தும், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை தோல்வியுறச்செய்தது. இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே இந்தியா, பேச்சுவார்த்தை ஒன்றே போரை முடிவுக்கு கொண்டுவரும் என கூறி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை வாக்கெடுப்புகளில், எந்தப் பக்கமும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்து வந்தது. இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் ரஷ்யாவின் தீர்மானத்தைப் புறக்கணித்தன.
உக்ரைனில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் ஒன்றை நேற்று கொண்டுவந்தது. பின்னர் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 13 நாடுகள் வாக்களிக்காமல், ரஷ்யாவின் தீர்மானத்தைப் புறக்கணித்தன. மேலும், இந்த தீர்மானத்தின் மீது, ரஷ்யாவும், சீனாவும் மட்டுமே வாக்களித்தன. இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய அமெரிக்காவின் ஐ.நா தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட்(Linda Thomas-Greenfield), “ரஷ்யா உருவாக்கிய மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க, சர்வதேச சமூகத்தைக் கேட்டு ஒரு தீர்மானத்தை முன்வைக்க, ரஷ்யா துணிச்சலாக இருப்பது உண்மையில் மனசாட்சிக்கு அப்பாற்பட்டது” என்று கூறினார்.
மேலும், “ரஷ்யா மனிதாபிமான சூழ்நிலையில் அக்கறை கொண்டிருந்தால், அது குழந்தைகள் மீது குண்டு வீசுவதை நிறுத்தி, அவர்களின் முற்றுகை உத்திகளை முடிவுக்குக் கொண்டுவரும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை,” பிரிட்டனின் ஐ.நா. தூதர் பார்பரா உட்வார்ட்(Barbara Woodward) பேசினார்.
உக்ரைன் ரஷ்யா விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் நடத்தப்பட்ட 4 வாக்கெடுப்புகளிலும் இந்தியா வாக்களிக்காமல், பேச்சுவார்த்தை ஒன்றே போருக்குத் தீர்வாக அமையும் என தொடக்கம் முதலே தனது நிலைப்பாட்டில் இந்தியா நிலையாக இருக்கிறது.