ஜெனீவா: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் புறக்கணித்தன.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஒரு மாதங்கள் கடந்தும் உக்ரைன் – ரஷ்யா இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைனின் வாழ்வாதாரம் முற்றிலுமாக மாறியுள்ளது. சுமார் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உக்ரைனில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் போலாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயியுள்ளன.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரைத் தடுக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில். உக்ரைன் மீது மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது. ரஷ்யா கொண்டு வந்த இந்த தீர்மானம் வெற்றி பெற 9 வாக்குகள் தேவை. இந்த நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 2 வாக்குகள்(ரஷ்யா, சீனா) மட்டுகள் பதிவாகின. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் தீர்மானத்தை புறக்கணித்தன. இதனால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது.
ரஷ்யாவின் தீர்மானம் குறித்து ஐ. நா.வுக்கான அமெரிக்க தூதர் தாமஸ் – கிரீன்ஃபீல்ட், ”உக்ரைனில் ரஷ்யா உருவாக்கிய மனிதாபிமான நெருக்கடியை தீர்க்க சர்வதேச சமூகத்தின் உதவியைக் கேட்டு தீர்மானம் கொண்டு வந்துள்ள ரஷ்யாவை மன்னிக்க முடியாது. உக்ரைனில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைகள் பற்றி ரஷ்யா கவலைப்படவில்லை. அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், சண்டையை நிறுத்திவிடுவார்கள்” என்று கூறினார்.