புதுடெல்லி: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் முக்கிய வழக்குகளால் சட்ட ரீதியிலான கேள்விகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் உச்சபட்ச நீதிபரிபாலன அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட ரீதியாக எழும் முக்கிய கேள்விகளுக்கும், மதம், இனம்,மொழி, இடஒதுக்கீடு, நீதிமன்றஅதிகாரம், வரி தொடர்பான வழக்குகளுக்கும் தீர்வு காண்பதற்காக 5 நீதிபதிகள், 7 நீதிபதிகள், 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு, அதன்மூலமாக தீர்வு காணப்பட்டு வருகின்றன.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளின் முன்பாக 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால் இந்த வழக்குகளுடன் இணைந்த நூற்றுக்கணக்கான தொடர்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
ஏனெனில் இந்த நூற்றுக்கணக்கான வழக்குகளின் இறுதிமுடிவு என்பது அரசியல் சாசனஅமர்வு பிறப்பிக்கும் உத்தரவைப்பொருத்தது. தாவூதி போஹ்ராசமூகத்துக்கும், மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் இடையே நிலுவையில் உள்ள வழக்குதான் அரசியல் சாசன அமர்வில்உள்ள மிகப்பழமையான வழக்கு. கடந்த 1986-ம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு சுமார் 36 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இதுபோல பல முக்கிய வழக்குகளும் ஆண்டுக்கணக்கில் தீர்வு காணப்படாமல் உள்ளன.
தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் நியமனம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு, வாட்ஸ்ஆப் தனியுரிமைக் கொள்கை போன்ற பொதுநல வழக்குகள் இந்த அமர்வுகளில் பகுதி, பகுதியாக விசாரிக்கப்பட்டு இறுதி விசாரணை நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன.
இதேப்போல அலிகார்முஸ்லீம் பல்கலைக்கழகத்துக்கான சிறுபான்மை அந்தஸ்து, எம்பி, எம்எல்ஏ-க்களுக்கான விலக்கு, பத்திரிகை சுதந்திரம், பண மசோதா போன்ற வழக்குகள் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விலும், சபரிமலை வழக்கு, அரசியலமைப்பு சட்ட அதிகாரம் 25 மற்றும் 27-ன்கீழ் உள்ள உரிமைகள், மத சுதந்திரம் மற்றும் அரசின் அதிகார வரம்பு போன்ற வழக்குகள் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்விலும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த தேக்கத்துக்கு தீர்வு காண்பது எப்போது என்பது குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், எம்பியுமான பி.வில்சன் கூறும்போது, ‘‘ உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா என விஸ்தரிப்பது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். அதைத்தான் எம்.பி. என்ற முறையில் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி வருகிறேன். அரசியல் சாசன அமர்வின் காலதாமதம் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய. பல ஆயிரம்கோடி ரூபாய் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர்நில உரிமை அரசுக்கு கிடைக்காமல் பறிபோய் உள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பதற்குகூட நேரம் கிடைக்காமல் அதீத அழுத்தத்தில் உள்ளனர்.அரசியல் சாசன அமர்வின் முன்பாக உள்ள சட்டக் கேள்விகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமேஉயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் தீர்வு கிடைக்கும்” என்றார்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கூறும்போது, ‘‘1950-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொடங்கியபோது 7 நீதிபதிகள் இருந்தனர். அப்போது வெறும் 1,500 வழக்குகள் மட்டுமேஇருந்தன. ஆனால் தற்போதுஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வழக்குகள் தாக்கலாகின்றன. இப்போதுள்ள மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இல்லை. தற்போது 32 நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கின்றனர்.
அரசியல் சாசன அமர்வில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க வேண்டுமெனி்ல் குறுகிய சாலையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுப்போமோ அதே நடவடிக்கைத்தான் அங்கும்தேவை. தற்போது அரசியல் சாசன அமர்வு முன்பாக இருக்கும் வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வகையிலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டின் 4 மூலைகளிலும் ‘கோர்ட் ஆப்அப்பீல்’ என்ற புதிய சட்ட அமைப்பை உருவாக்க சட்டமசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல அரசியலுக்கு அப்பாற்பட்டு ஏதாவது சட்டரீதியாகமாற்றங்கள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்” என்றார்.