உத்தரப்பிரதேச மாநில லாரியில் கடத்தி வரப்பட்ட சுமார் 3 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை அருகே இன்று விடியற்காலை உத்தரப்பிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி வளாகத்தின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து லாரியின் ஓட்டுனர் கிளீனர் என யாரும் இல்லாததால் சந்தேகப்பட்ட நெல் மண்டி வியாபாரிகள் லாரியில் ஏறி பார்த்தனர். அப்போது அதில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து தானிய வியாபாரிகள் சங்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் பாலுசெட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது அதில் சுமார் 3டன் எடையுள்ள 64 பாலிஸ் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் இருந்ததை அடுத்து வனசரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தகவலை அடுத்து அங்கு வந்த காஞ்சிபும் மாவட்ட வனசரக அலுவலர் ராமதாஸ், வனக்காப்பாளர் ஆதித்தன் ஆகியோர் பாலுசெட்டி காவல் துறையினரிடம் இருந்து லாரியையும், செம்மர கட்டைகளையும் கைப்பற்றி வன இலாகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM