புதுடெல்லி: உ.பி.யில் கடந்த ஆட்சியில் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் முக்தார் அன்சாரி, அத்தீக் அகமது உள்ளிட்டோரின் பல கோடி ரூபாய் சொத்துக்களை முதல்வர் ஆதித்யநாத் இடித்து தள்ள உத்தரவிட்டார்.
இதனால், ஆதித்யநாத் ‘புல்டோசர் பாபா’ என்று அழைக்கப்பட்டார். அந்த பட்டத்தை முன்வைத்தும் உ.பி. தேர்தலின் போது செய்த பிரச்சாரம் நல்ல பலனை கொடுத்தது. தேர்தலின் போது உ.பி. வந்த ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானும், ‘புல்டோர் பாபா’ என்று ஆதித்யநாத்தை புகழ்ந்து பிரச்சாரம் செய்தார். தேர்தலில் ஆதித்யநாத் வெற்றி பெற புல்டோசர் பாபா என்ற பட்டமும் உதவியது.
இந்நிலையில், முதல்வர் சவுகானும் ம.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து வந்தார். குறிப்பாக சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மோசின், ரியாஸ் மற்றும் ஷாபாஸ் ஆகியோரின் கட்டிடங்களை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் புல்டோசரால் இடித்து தரை மட்டமாக்கினார்.
அடுத்து சியோன் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த ஹரிராம் வர்மா, ராகுல் வர்மா, விகாஸ் சிங், நிர்பத் வர்மா, வீரேந்திர வர்மா ஆகியோரின் வீடுகளும் புல்டோசருக்கு இரையாயின. இதற்கு அஞ்சி அதுபோன்ற குற்றங்கள் புரிந்த சிலரும் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதனால், முதல்வர் சவுகானையும், உ.பி. பாணியில் ம.பி.வாசிகள் தற்போது, ‘புல்டோசர் மாமா’ என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். அடுத்த ஆண்டு மார்ச்சில் ம.பி. சட்டப்பேரவைக்கு தேர்தல் வரவிருக்கும் நிலையில் புல்டோசர் மாமா என்ற செல்லப் பெயரை பாஜக.வினர் முக்கிய பிரச்சாரமாக முன்னெடுத்துள்ளனர்.
பாஜக எம்எல்ஏ ராமேஷ்வர் சர்மா தனது போபால் பங்களா முன்பாக பெரிய அளவிலான டிஜிட்டல் பதாகை வைத்துள்ளார். அதில், சிவராஜ் சிங்கின் பெரிய படத்துடன், ‘ம.பி.யில் பெண்களை பாதுகாக்க மாமாவின் புல்டோசர் பாயத் தயங்காது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ம.பி. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்தர் குப்தா கூறும்போது, ‘‘ஒருவரது சொத்தை புல்டோசரால் இடிக்க சட்டம் அனுமதிக்கிறதா என்பது விவாதத்துக்கு உரியது, இந்த அரசுக்கு அவ்வளவு தைரியம் உள்ளது எனில் சட்டவிரோதமாக சம்பாதித்த பல கோடிகளுடன் பிடிபடுபவர்கள் மீது புல்டோசர் பாயாதது ஏன்? பெண்களுக்கு ம.பி.யில் கிடைக்கும் உண்மையான பாதுகாப்பு தேசியக் குற்றப் பதிவேட்டில் உள்ளது’’ என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் தேசியக் குற்றப் பதிவேட்டின் புள்ளிவிவரத்தின்படி, பாலியல் குற்றங்களில் பாஜக ஆளும் உ.பி. முதலிடத்திலும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் இரண்டாவதாகவும் உள்ளன.