புதுடெல்லி:
கேரளாவில் கே ரெயில் சில்வர் லைன் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில கிராமங்களைச் சேர்ந்த மக்களும் நிலம் கைகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோட்டயம் மாவட்டத்தில் கே ரெயில் திட்டத்திற்கு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த சென்ற போது, அவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இந்நிலையில், கே ரெயில் சில்வர்லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் இந்த பிரச்சனையை ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் மக்களவையில் எழுப்பினர். காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் பேசும்போது, பெண் எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் விஜய் சவுக்கில் இருந்து ஆர்ப்பாட்டம் நடத்தி பேரணியாக புறப்பட்டபோது, போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கியதாக குற்றம்சாட்டினர்.
ஆனால், திடீரென பாராளுமன்றத்தை நோக்கி முழக்கங்கள் எழுப்பியபடி சென்றதால் தடுத்து நிறுத்தியதாகவும், எம்.பி.க்கள் என்பதற்கான அடையாள அட்டையை காட்ட மறுத்ததால் தடுத்து நிறுத்தியதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாராளுமன்ற வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை அழைத்து, அவர்கள் அடையாளம் காட்டியதும் எம்.பி.க்களை அனுமதித்ததாகவும், அவர்களில் யாரையும் தாக்கவில்லை என்றும் காவல்துறை கூறி உள்ளது.
இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினர் என்.கே.பிரேம்சந்திரன் கூறினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் எம்பிக்கள் என்பது காவல்துறையினருக்கு நன்கு தெரியும் என்றும், ஆனால் அவர்களை பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
உறுப்பினர்களின் புகார் குறித்து கேட்டறிந்த சபாநாயகர், இதுகுறித்து ஆலோசித்துவிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக கூறினார்.
இதேபோல் மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால் எழுப்பினார். அமைதியான முறையில் பாராளுமன்றம் நோக்கி வந்த எம்.பி.க்களை போலீசார் வேண்டுமென்றே தடுத்து முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் வழங்கும்படி வேணுகோபாலிடம் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். இதுபற்றி உள்துறை அமைச்சகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.