சேலத்தை சேர்ந்தவர் நடுப்பட்டி மணி. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். மணி எடப்பாடி பழனிசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதுபோல வெளியில் பந்தா காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் அதை வைத்து பணம் சம்பாதிக்கத் திட்டம் தீட்டி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல கோடி வாங்கியிருக்கிறார். அப்படி பணம் கொடுத்த நெய்வேலியைச் சேர்ந்த இன்ஜினீயர் தமிழ்ச்செல்வன் என்பவர் மணி மீது சேலம் குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அவர் புகாரின் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியபோது, மணி இதுபோன்று பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும், சிலருக்கும் மட்டும் வாங்கிய பணத்தில் பாதி பணம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் மணி, அவர் கூட்டாளி செல்வக்குமார் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, மணி சிறையிலிருந்து வெளியில் வந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு வரும் 29-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கிறது.