நியூயார்க்,:உக்ரைன் போரை விமர்சிக்கும் மக்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரும்புக் கரத்துடன் நசுக்கி வருவதாக அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
கடந்த, 2011 முதல் புடினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை, இரு ஆண்டுகளுக்கு முன் விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது.
அதில் பிழைத்த நவால்னிக்கு நேற்று முன்தினம் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு வழக்கில் நவால்னி இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். புதிய தண்டனை வாயிலாக நவால்னியை சிறையிலேயே வைத்திருக்க புடின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்போரையும் புடின் அரசு சிறையில் தள்ளி வருகிறது.
இதுவரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில், ரஷ்ய அரசு ‘டிவி’யின் நேரடி ஒளிபரப்பின் போது, செய்தி வாசிப்பவரின் பின்னால் திடீரென தோன்றி ‘போர் வேண்டாம்’ என்ற அட்டையை காட்டிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
‘டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்’ ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து செய்திகளை வெளியிடுவது கிரிமினல் குற்றம் ஆக்கப்
பட்டுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை, போர், ஆக்கிரமிப்பு என குறிப்பிடக் கூடாது என ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதை, ‘ரஷ்ய ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை’ என குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நவால்னி ஆதரவாளர்கள் ‘யு டியூப் சேனல்’ ஒன்றை துவக்கி, புடின் ஊழல்களை அம்பலப்படுத்த துவங்கிஉள்ளனர். புடின் லஞ்சப் பணத்தில் இத்தாலியில் பல கோடி ரூபாய் சொகுசு படகும், மொனாகாவில் ஆடம்பர மாளிகைகளும் வாங்கியுள்ளதாக அதில் வெளியான செய்தியை சில மணி நேரத்தில் 28 லட்சம் பேர் பார்த்ததாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துஉள்ளது. ஆனால் ”அது பொய் செய்தி” என புடின் மறுத்துள்ளார்.
Advertisement