பெங்களூரு:பி.டி.ஏ., எனப்படும் பெங்களூரு அபிவிருத்தி ஆணையத்தின் இடைத்தரகர்களின் இல்லங்களில், கோடிக்கணக்கான ரொக்கம், தங்க நகைகள் கண்டு பிடிக்கப்பட்டன. விசாரணையில் சிக்கியவர்கள் கைது அபாயத்தில் உள்ளனர்.
பி.டி.ஏ., எனும் பெங்களூரு அபிவிருத்தி ஆணையத்தின் ஒன்பது இடைத்தரகர்களின் வீடுகள் உட்பட, 11 இடங்களில் ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை அதிகாரிகள், இரு நாட்களுக்கு முன் சோதனை நடத்தினர். ஒவ்வொருவரின் வீட்டிலும், நுாற்றுக்கணக்கான நில ஆவணங்கள், கோடிக்கணக்கான ரொக்கம், கிலோ கணக்கில் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சாதாரண நிலையிலிருந்த இடைத்தரகர்களின் சொத்து, சில ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளதை கண்டு, பி.டி.ஏ., அதிகாரிகள் ஆச்சர்யமடைந்தனர். ஆவணங்களை ஆய்வு செய்ததில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரிந்தது. இடைத்தரகர்களின் சொத்து ரகசியம் குறித்து அமலாக்கத்துறை கவனத்துக்கு கொண்டு செல்ல, ஏ.சி.பி., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பி.டி.ஏ., ஆவணங்கள் கிடைத்த இடைத்தரகர்களுக்கு, ‘நோட்டீஸ்’ கொடுத்து விசாரணை நடத்த, ஏ.சி.பி., அதிகாரிகள் தயாராகின்றனர். தேவைப்பட்டால் கைது செய்யவும் வாய்ப்புள்ளதால், இடைத்தரகர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.ஏ.சி.பி., – ஏ.டி.ஜி.பி., சீமந்த் குமார் சிங் கூறியதாவது:ஏ.சி.பி., சோதனைக்கு ஆளான இடைத்தரகர்களின் தனிப்பட்ட சொத்து குறித்து, விசாரணை நடத்தவில்லை.
பி.டி.ஏ.,வுக்கு சம்பந்தப்பட்ட சில ஆவணங்கள், பி.டி.ஏ., முறைகேடில் இவர்களின் பங்களிப்பு என்ன என்பது விசாரணை நடத்தப்படுகிறது.தற்போது ‘ஜப்தி’ செய்யப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இது குறித்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.