ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித் தொகை: நிதியமைச்சர் தகவல்

சென்னை: பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் பொருந்தும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

அப்போது, பேசிய அவர், “அரசுப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று ஏற்கெனவே 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்து.

இந்தத் திட்டம் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் பொருந்தும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

முன்னதாக, 2021-2022 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகள் குறித்து பேசிய அவர், “2021-2022 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை சமர்ப்பிக்கிறேன். துணை மானியக் கோரிக்கைகளை விளக்கிக் கூறும் விரிவான அறிக்கையினை முன் வைக்கின்றேன். இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்தத் துணை மதிப்பீடுகள் மொத்தம் 10,567.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 8,908.29 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 1,658.72 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதியன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் “புதுப்பணிகள்” மற்றும் “புது துணைப்பணிகள்” குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத் துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.

துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதியொதுக்கம் தேவைப்படும் சில முக்கிய இனங்கள் பின்வருமாறு:

  • மானியக் கோரிக்கை எண்.12 – “கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)”, நகைக் கடன் தள்ளுபடிக்காக 1,215.58 கோடி ரூபாய்.
  • மானியக் கோரிக்கை எண் 42 -”ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை”, பதினைந்தாவது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியத்திற்காகவும், செயல்திறன் மானியத்திற்காகவும் 1,140.31 கோடி ரூபாய். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 948.58 கோடி ரூபாய்.
  • மானியக் கோரிக்கை எண் 48 – “போக்குவரத்துத் துறை” மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்காக 546.83 கோடி ரூபாய்.
  • மானியக் கோரிக்கை எண் 51 – ”இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு”, கோவிட் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும் 333.55 கோடி ரூபாய்.
  • மானியக் கோரிக்கை எண் 34 – “நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை”, நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு 212.92 கோடி ரூபாய்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகின்றேன் என்று அவர் கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.