மனைவி மீது சந்தேகம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் கொச்சாவூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான கூலித்தொழிலாளி பசப்பா. திருமணமான இவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்துள்ளார். இந்த நிலையில், கீழ் கொச்சாவூர் பகுதிக்கு அருகில் உள்ள மேல் கொச்சாவூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவருக்கும், பசப்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் திருமணம் வரைச் சென்றிருக்கிறது. இருவரும் திருமணம் செய்துகொண்டு கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார். இந்தச் சூழலில்தான், பசப்பாவுக்குத் தான் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில், அந்தப் பெண் பசப்பாவுடனான தகராறு காரணமாக அண்மையில் தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
கழுத்தறுத்து கொலை:
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பசப்பா நள்ளிரவில் அந்தப் பெண்ணைக் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். காலை நேரத்தில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அஞ்செட்டி பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதே நேரத்தில் கொலை செய்துவிட்டுத் தலைமறைவான பசப்பாவை காவல்துறையினர் தேடிவந்தனர். காவல்துறையினர் தேடிவரும் அச்சத்திலிருந்த பசப்பா, தனது ஊருக்கு அருகிலிருக்கும் வனப்பகுதியில் உள்ள கொய்யா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அஞ்செட்டி பகுதி காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். நபர் ஒருவர் சந்தேகத்தில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.