ஓடும் பஸ்சில் பீர் குடித்து கும்மாளமிட்ட மாணவிகள்- கல்வித்துறை விசாரணை

செங்கல்பட்டு:
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிகள் செங்கல்பட்டில் இருந்து தச்சூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது ‘பீர்’ குடிக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சி 34 வினாடிகள் ஓடுகிறது. அதில் மாணவ-மாணவிகள் மொத்தமாக நின்றபடி பயணம் செய்கின்றனர்.
அப்போது மாணவிகளில் ஒருவர் பீர் பாட்டிலை அசால்டாக கையில் தூக்கிய படி அதனை குடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மற்ற மாணவிகளும் எந்தவித தயக்கமும் இன்றி ஒருவர் பின் ஒருவர் பீர் பாட்டில் வாங்கி மாறி மாறி குடிக்கிறார்கள்.
பின்னர் போதையில் மாணவிகள் கூச்சலிட்டு பஸ்சில் ரகளையில் ஈடுபடுகின்றனர். அருகில் மாணவர்களும் நிற்கிறார்கள்.மற்ற பயணிகள் அருகில் இருப்பதை பற்றி கவலைப்படாமல் ஓடும் பஸ்சில் மாணவிகள் பீர் குடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
புத்தகத்தை கையில் தூக்கும் மாணவிகள் தடம் புரண்டு பொது இடத்தில் எந்தவித அச்ச உணர்வு இன்றி மதுபாட்டிலை கையில் தூக்கி இருப்பது கவலை அடையச் செய்து உள்ளது.
இந்த வீடியோ காட்சியில் பீர் குடிக்கும் மாணவிகளின் முகம் தெளிவாக தெரிகிறது. மேலும் ‘குடிச்சா வாசனை வருமாடி’ என மாணவிகள் கேட்டபடி ஒவ்வொருவராக குடிக்கின்றனர்.
இந்த காட்சியை மாணவி ஒருவரே வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் இது சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பீர் குடித்து பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட மாணவிகளை தனித்தனியாக அழைத்து அறிவுரை கூறி எச்சரிக்க திட்டமிட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளியிலும் ஆசிரியர்கள் தனியாக விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேரி ரோஸ் மிர்மலா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன் ஆகியோர் கூறியதாவது:-
சமூக வலைதளத்தில் மாணவிகளின் வீடியோவை பார்த்தோம். பள்ளியை விட்டு வெளியே சென்றவுடன் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம்.
விரைவில் அரசு பொதுதேர்வு தொடங்க உள்ளது. இதற்காக மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்கள் கடும் முயற்சி எடுத்து வரும் இந்த வேளையில் இது போன்ற செயல்கள் வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.