இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடி இலங்கை நாட்டை உலுக்கி வருவதால் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டது. டீசல் கிடைக்காததாலும், பல மணி நேரம் மின்வெட்டாலும் தொழில்கள் முடங்கி கிடக்கிறது.
பொதுமக்கள் உணவு பொருட்களுக்காக அல்லாடி வருகிறார்கள்.பால், ரொட்டிக்கு கூட அவர்கள் தவியாய், தவித்து வருகிறார்கள்.
இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.650 முதல் ரூ.718-வரை விற்கப்படுகிறது. சிவப்பு அரிசி கிலோ 684 ரூபாய்க்கும், கோதுமை மாவு கிலோ ரூ.752-க்கும் விற்கப்படுகிறது.
சமையல் கியாஸ் விலை ரூ.13,680 ஆக உயர்ந்து உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.869-க்கும், ஒரு முட்டை விலை 102 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலையும் பொதுமக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இதை தவிர இதனை வாங்குவதற்கு அவர்கள் பல மணிநேரம் கால்கடுக்க காத்து நிற்கிறார்கள்.
பலர் வாழ்வாதரத்தை இழந்து தவிப்பதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறார்கள். ஏராளமானோர் கிடைக்கும் ரொட்டி துண்டுகளை மட்டுமே சாப்பிட்டு நாட்களை கடத்தி வருகின்றனர். இலங்கையில் குடும்பம், குடும்பமாக உணவு பொருட்கள் மற்றும் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் வாங்க மக்கள் அலைந்து திரிவது பார்க்க பரிதாபமாக உள்ளது.
இதையும் படியுங்கள்…அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுச் செயலர் மேடலின் ஆல்பிரைட் காலமானார்