கணவர் செய்தாலும் அது பாலியல் வன்கொடுமையே – கர்நாடகா ஐகோர்ட் அதிரடி

கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மனைவி அளித்த புகார் , கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி எம் நாகபிரசன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், கணவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி,” ஒரு மனிதன் என்பது ஒரு மனிதன் தான்; ஒரு செயல் என்பது ஒரு செயல் தான்; பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பாலியல் வன்கொடுமையே! அது ஒரு “கணவர்” “மனைவி” மீது நிகழ்த்தினாலும் அது பாலியல் வன்கொடுமையே ஆகும். கணவர் மனைவியை ஆட்சி செய்பவர்கள் என்பது மிகவும் பழமையான பிற்போக்குத்தனமான எண்ணம் என கருத்து தெரிவித்த அவர், கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை உறுதி செய்து “பாலியல் வன்கொடுமை” பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

முன்னதாக, இந்தக் குற்றத்தை பிரிவு 376 (கற்பழிப்பு) கீழ் மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததால் தான், வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி அக்கணவர் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

ஏனெனில், பாலியல் வன்கொடுமையை வரையறுக்கும் IPC பிரிவு 375 ஒரு முக்கியமான விதிவிலக்கைக் கொண்டுள்ளது. அதாவது, “ஒரு ஆண் தனது சொந்த மனைவியுடன், மனைவி பதினெட்டு வயதுக்குக் கீழ் இல்லாத போது, உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாக கருதப்படாது” ஆகும்.

2018 ஆம் ஆண்டில், இதேபோன்ற ஒரு வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் திருமணமான ஒருவர் தனது மனைவி தாக்கல் செய்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரினார்.

அப்போது, பாலியல் வன்கொடுமைக்கு பதியப்பட்ட எஃப்ஐஆரை உயர் நீதிமன்றம் ரத்து செய்த போதிலும், திருமணம் என்கிற பெயரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தது.

திருமண பாலியல் வன்கொடுமை விதிவிலக்கின் அரசியலமைப்புச் சட்டம் தற்போது டெல்லி , குஜராத் உயர் நீதிமன்றங்களில் சவாலாக உள்ளது.

நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், “திருமணம் என்பது ஆண்களுக்கு மிருகத்தை கட்டவிழ்த்துவிடுவதற்கான எந்த சிறப்பு உரிமையையும் வழங்கவில்லை. அந்த ஆண் கணவனாக இருந்தாலும், தண்டனை வழங்கிட வேண்டும்.

மனைவியின் சம்மதத்திற்கு எதிராக, கணவனால் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது, அதனை பாலியல் வன்கொடுமை என கூறலாம். கணவனின் செயலால் அப்பெண்ணின் மனதளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கணவர்களின் இத்தகைய செயல்கள் மனைவிகளின் ஆன்மாவை காயப்படுத்துகிறது. எனவே, சட்டமியற்றுபவர்கள் தற்போது மௌனக் குரல்களையும் கேட்டாக வேண்டிய நிலைமை உள்ளது” என தெரிவித்தார்.

2019 நவம்பரில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி நாகபிரசன்னா, கடந்த ஆண்டு நவம்பரில் நிரந்தர நீதிபதியானார். 2020 ஆம் ஆண்டில், பாலின சமத்துவம் குறித்த ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.