காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது  

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய மூன்று வர்த்தமானிகளுக்குப் பாராளுமன்றம் அனுமதி வழங்கியது.

இதற்கமைய காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்திற்கு அமைய காணி அமைச்சரினால் விதிக்கப்பட்ட, 2021 ஒக்டோபர் 28ஆம் திகதிய 2251/48ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உள்ளடங்கலாக 2022 பெப்ரவரி 07ஆம் திகதிய 2266/5ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி ஒழுங்கு விதியின் மூலம் தீர்மானிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் மானியங்களுக்கான பத்திரங்களை வழங்கும்போது கவனத்தில் கொள்ளப்படும் வருமான எல்லையை திருத்துதல் மற்றும் 1985ஆம் ஆண்டு காணி கட்டளை 115 இன் கீழ் வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப் பத்திரத்திரத்துக்கான அதிகுறைந்த பங்குகள் என்பன இந்த ஒழுங்குவிதிகளின் ஊடாக திருத்தப்படவுள்ளன.

இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்புகளின் இணைப்புக்கள் வருமாறு

http://documents.gov.lk/files/egz/2021/10/2251-48_T.pdf

http://documents.gov.lk/files/egz/2022/1/2262-50_T.pdf

http://documents.gov.lk/files/egz/2022/2/2266-05_T.pdf

பாராளுமன்றம் நேற்று (23) மு.ப  10.00 மணிக்கு கூடியதுடன் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் பிரசுடிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை நடைபெற்றது.

அதன் பின்னர், 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்போது நீதித்துறையில் உள்ள அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரள, நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரியிடம் கேள்வியெழுப்பினார். அத்துடன், வெளிநாட்டில் பணியாற்றும் ஊழியர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களின் பயிற்சி மற்றும் பாதுகாப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அகில எல்லாவல, தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால.த சில்வாவிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் வழங்கியிருந்தனர்.

அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உரித்தான பணிக்கொடையை ஓய்வூதியம் பெற்றுக்கொண்டதையடுத்து விரைவில் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே.சி.அலவத்துவல கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் பாராளுமன்றம்  (24) மு.ப 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.