புதுச்சேரி-எம்.எல்.ஏ.,க்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டசபை காவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.இது குறித்து சட்டசபை செயலர் முனிசாமி, சட்டசபை காவலர்கள், வாட்ச் அண்ட் வார்டுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சட்டசபை வளாகத்தில் காவல் பணியில் உள்ள காவலர்கள், வாட்ச் அண்ட் வார்டுகள், பணி நேரங்களில் மொபைல்போனில் பேசிக் கொண்டோ, தகவல்களை படித்துக்கொண்டோ அல்லது அனுப்பிக்கொண்டோ பணிகளை சரிவர செய்யாமல் இருப்பதை சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இச்செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.பணி நேரத்தில் சீருடை, காலணி, தொப்பி மற்றும் பேஜ்ட் போன்றவற்றை சரியான முறையில் அணிந்திருப்பதில்லை என்றும் கவனத்திற்கு வந்துள்ளது.சட்டசபைக்கு வரும் போதும் வெளியேறும் போதும் அவர்களுக்குண்டான மரியாதையை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கட்டுப்பாடு மிக்க காவல் பணியில் இக்குறைபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல. அத்தகைய ஒழுக்கமற்ற செயல்களை இச்செயலகம் வன்மையாக கண்டிக்கிறது.அதன் அடிப்படையில், சபாநாயகர் உத்தரவின் பேரில், அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள்,துணை சபாநாயகர், எம்.எல்.ஏக்கள் வருகையின் போதும் அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேறும் போதும் அவர்களுக்குரிய மரியாதையை தவறாது அளிக்க வேண்டும்.பணி நேரங்களில் மொபைல்போனில் பேசுவது, தகவல் பரிமாறுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அடுத்த ஷிப்ட் காவல் பணிக்கு வந்து பணியை ஏற்ற பிறகே முன் ஷிப்டில் உள்ளவர் பணியிலிருந்து வெளியேற வேண்டும்.எக்காரணம் கொண்டும் குறிப்பிடப்பட்ட பணியிடத்தில் காவலர் அல்லது வாட்ச் அணிட் வார்டு இல்லாமல் இருக்க கூடாது.பணி நேரங்களில் மற்ற பணியாளர்களுடன் தேவையற்ற முறையில் பேசிக்கொண்டு இருக்க கூடாது. சீருடை, காலணி, தொப்பி, பேட்ஜ் போன்றவற்றை முறையாக அணிந்து வர வேண்டும்.பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவசியமான காரணம் இன்றி விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.இந்த குற்றச்சாட்டுகள் எதிர்காலத்தில் எழாத வகையில் தடுப்பு நடவடிக்கையை மார்ஷல் எடுக்க வேண்டும்.இந்த அறிவுரைகளை மீறும் காவலர்கள் மற்றும் வாட்ச் அண்ட் வார்டுகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement