புதுடெல்லி: கேரளாவில் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில்வர்லைன் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக முதல்வர் பினராயி விஜயன் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
சில்வர்லைன் திட்டம் என்பது தெற்கில் திருவனந்தபுரத்தையும் வடக்கில் காசர்கோடையும் இணைக்கும் 529.45 கிமீ திட்டம் இது. 11 மாவட்டங்களில் உள்ள 11 ரயில் நிலையங்களை இது இணைக்கும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் ஒருவர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோட்டிற்கு நான்கு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் செல்ல முடியும்.
ஏற்கெனவே இருக்கும் ரயில் பாதைகளை பயன்படுத்தி பயணம் செய்தால் தெற்கில் இருந்து வடக்கில் உள்ள காசர்கோடு செல்ல 12 மணி நேரம் ஆகும். கேரள ரயில் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் திட்டத்திற்கான காலக்கெடு 2025 ஆகும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜகவும் கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் திட்டத்தின் எல்லைக் கல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த திட்டம் தற்போது மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் அனுமதிக்காக காத்திருக்கிறது. முன்னதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திட்டத்தில் உள்ள தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த தெளிவான யோசனையைப் பெறாமல் திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறினார்.
திட்டம் தொடர்பான மதிப்பீடு யதார்த்தமானது அல்ல என்றும் திட்டத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட அச்சங்கள் உண்மையானவை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் இன்று சந்தித்தார். பின்னர் இதுகுறித்து பினராயி விஜயன் கூறியதாவது:
பிரதமர் மோடியுடனான 20 நிமிட சந்திப்பின் போது, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னாவிடம் இந்த விவகாரம் குறித்து பேச அவர் ஒப்புக்கொண்டார். இந்த விவாதம் சாதகமான பலனைத் தரும். வேகமான, வசதியான மற்றும் பாதுகாப்பான பயண வழிமுறைகள் காலத்தின் தேவை. சில்வர்லைன் அதை நிறைவேற்றுகிறது. இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பற்றது என்ற கவலை தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் பினராயி விஜயன் சந்தித்தார், ஆனால் அவருடன் விரிவான கலந்துரையாடல் எதுவும் நடத்தப்படவில்லை.