மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு போலீசாருக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பிர்ஹாம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் பாது ஷேக். திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகியான இவர், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்புர்ஹாட் கிராமத்தில் நேற்று திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த சில வீடுகளை பூட்டிவிட்டு அவற்றுக்கு சமூக விரோதிகள் சிலர் தீ வைத்தனர்.
இதில் 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ராம்புர்ஹாட்டில் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நடைபெறும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த சம்பவத்தில் போலீஸாரிடம் இருந்து எந்தவொரு சாக்கு போக்கும் வரக் கூடாது. இந்த பயங்கரத்தை அரங்கேற்றியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட எவருக்கும் துணிச்சல் வராத அளவுக்கு இந்த வழக்கை அரசு எடுத்துச் செல்லும். குற்றவாளிகளுக்கு கிடைக்கப் போகும் தண்டனை அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். ராம்புர்ஹாட்டில் கலவர சூழல் உருவானதும் உடனடியாக அங்கிருக்கும் மக்களை பாதுகாக்குமாறு திரிணாமூல் காங்கிரஸ் பகுதித் தலைவருக்கு உத்தரவிட்டேன். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இதனால் அவரையும் கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM