சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள இளங்கோவன் தெருவில் 18-ம் தேதி முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்ற போது அவர் மீது ஒரு கார் ஏறியது. அக்கம் பக்கத்தினர் அந்த முதியவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணை செய்ததில் இறந்தவர் பெயர் முனுசாமி (70) என்று தெரியவந்தது.
மேலும் அந்த முதியவர் மீது காரை ஏற்றிய நபர் பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டதில், அந்த கார் நடிகர் சிம்புவுக்கு சொந்தமானது என்றும் அந்த சம்பவம் நடந்த நாளில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் அந்த காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக போலீஸா தரப்பில் கூறப்படுகிறது. கார் விபத்தின்போது நடிகர் சிம்பு காரில் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரத்தில் காரை ஓட்டி வந்த அவரது ஓட்டுநர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.