டமாஸ்கஸ்: ஈரானுக்கும் சிரியாவுக்கும் இடையிலான உறவு மிகச் சிறந்ததாக இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் – சிரியா இடைடேயேயான உறவை பலப்படுத்த, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் சிரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணம் குறித்து டமாஸ்கஸில் செய்தியாளர்களிடம் ஹொசைன் அமீர் பேசும்போது, “வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக ஈரான் – சிரியா இடையே உறவு சிறந்த முறையில் உள்ளது. சிரியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த ஈரான் உறுதியாக உள்ளது. மேலும், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிரிய அரசைக்கும், மக்களுக்கும் ஈரான் உறுதுணையாக இருக்கிறது” என்றார்.
போருக்குப் பிறகு அரபு நாடுகளுடன் தனது நல்லுறவை மேலும் வலுப்படுத்த சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் முயற்சி செய்து வருகிறார். அதன் முன்னெடுப்பாக ஈரானுடனான தனது உறவை சிரியா வலுப்படுத்தி வருகிறது. அதனை உறுதிச் செய்யும் வகையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரியா போர்: ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சுமத்திய நிலையில், தேர்தலில் பஷார் அல் ஆசாத் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.