புதுக்கோட்டை: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மதுரையைச் சேர்ந்த மாடு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொன்னைப்பட்டியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (31). இவர், மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஒரு கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டுக்கு தொழில் ரீதியாக அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, 14 வயதுள்ள ஒரு சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 2019-ல் பள்ளிக்கு சென்ற அவரை கடத்திச் சென்றுள்ளார். பின்னர், பெற்றோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு விசாரித்ததில் சிறுமிக்கு தாமரைச் செல்வன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொன்னமராவதி போலீஸார் தாமரைச் செல்வனை கைது செய்தனர். இந்த வழக்கில் தாமரைச் செல்வனுக்கு உதவியதாக நற்சாந்துபட்டியைச் சேர்ந்த மணி (38) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
3 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில், புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்.
சிறுமியை கடத்திய குற்றத்துக்கு தாமரைச் செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும், ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.3.8 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் அவரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்படாததால் மணி விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறைக்கு தாமரைச் செல்வன் அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்யும் வகையில் முறையாக புலன் விசாரணை செய்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாராட்டினார்.