புதுடெல்லி: கேரள முதல்வர் பினராய் விஜயன், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். கேரளாவில் ‘சில்வர்லைன்’ என்ற அதிவேக ரயில் திட்டத்தை நிறைவேற்ற பினராய் முடிவு செய்துள்ளார். ஆனால், இம்மாநிலத்தை சேர்ந்த கட்சிகளும், மக்களும் இதை கடுமையாக எதிர்த்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியை சந்தித்தபோது இந்த ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி பினராய் கோரினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘சில்வர்லைன் திட்டம் பற்றி பிரதமர் மோடி கவனமாக கேட்டறிந்தார். அவர் இந்த திட்டத்துக்கு சாதகமான நிலைபாட்டை கொண்டுள்ளார். எனவே, இந்த திட்டத்தை கேரளாவில் நிறைவேற்ற, ஒன்றிய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்,’’ என்றார்.