ஜெனீவா,
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (வயது 38). இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மனைவி என பரவலாக நம்பப்படுகிறது. புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் புதின் இதுவரை வெளியிடவில்லை.
புதினின் ரகசிய காதலி, நேசனல் மீடியா குரூப் என்ற ரஷியாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் வாரிய தலைவராக இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் யூரோ மதிப்பிலான சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. புதின் மற்றும் கபேவா ஜோடி ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் பல்வேறு தருணங்களில் வெளிவந்துள்ளன.
ரஷியாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர், கடந்த 2020ம் ஆண்டு ரசாயன தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டதட்ட இறக்கும் நிலைக்கு சென்றார்.
இதில் இருந்து மீண்டு வந்த அவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். புதினின் எதிரியான, சிறையில் அடைக்கப்பட்ட அலெக்சி நவால்னி அமைத்திருந்த புலனாய்வு அமைப்புகளின் கூற்றுப்படி, ரஷியாவை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த வர்த்தக தலைவர்கள் பலர் வீடு, பணம் மற்றும் பிற சொத்துகளை அன்பளிப்பு என்ற முறையில் கபேவாவின் குடும்பத்தினருக்கு அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு, தனது ரகசிய காதலி கபேவாவை, சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் வசமுள்ள பகுதிக்கு புதின் அனுப்பி வைத்துள்ளார் என நம்பப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, ரஷியா, பெலாரஸ் மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த குடிமக்கள் பலர், கபேவாவை சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து துரத்துங்கள் என்று அந்நாட்டு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ரஷியாவுக்கு அவரை நாடு கடத்தும்படியும் கூறியிருந்தனர்.
இதற்காக மனு ஒன்றில் இதுவரை 63 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர். உக்ரைனுக்கு எதிராக போர் ஒருபுறம் நடந்து வந்தபோதிலும், புதினுக்கு ஆதரவான கூட்டாளியாகவே தொடர்ந்து சுவிட்சர்லாந்து அரசு செயல்பட்டு வருகிறது.