ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் தில் மரக்கிடங்கு ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பிஹாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத் அருகில் உள்ள செகந்திராபாத் போயகூடா ஐடிஎச் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக மரக் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதின் ஒரு பாதி மரக் கிடங்காகவும் மற்றொரு பாதி பழைய இரும்பு பொருட்களை வாங்கும் மையமாகவும் செயல்பட்டு வந்தது.
இங்கு பிஹாரைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் பகலில் செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் நகர்ப் புறங்களில் பழைய பேப்பர், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விலைக்கு வாங்கி வந்து, இந்த குடோனில் விற்று வந்தனர். இரவில் குடோனிலேயே படுத்துக் கொள்வார்கள்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் இந்த குடோனில் தீப்பற்றியது. மரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 8 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
குடோனில் தூங்கிக் கொண்டிருந் தவர்களில் ஒருவர் மட்டுமே பலத்த காயங்களுடன் தப்பினார். மற்ற 11 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிஹாரைச் சேர்ந்த சிகந்தர் (40), பிட்டூ (23), சத்யந்தர் (35), கோலு (28), தாமோதர் (27), ராஜேஷ் (25), தினேஷ் (35), சிண்டூ (27), தீபக் (26), பங்கஜ் (26), ரஜீஷ் (24) ஆகிய 11 பேரின் உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன.
குடோன் உரிமையாளர் கைது
சம்பவ இடத்துக்கு போலீஸாரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு சாதனங்கள் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு வசதியின்றி இந்த குடோன் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக போலீஸார் கூறினர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், குடோன் உரிமையாளர் சம்பத்தை கைது செய்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளர்.
ரூ.7 லட்சம் நிதி உதவி
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். தெலங்கானா அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இதனிடையே, 11 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு விமானம் மூலம் பிஹார் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டது.