கோடைக்காலம் தொடங்கியதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்புக்கு ஏற்ப, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வெயிலின் தாக்கம் கடந்த 2 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதற்கேற்ப மின்சார தேவையும் வேகமாக அதிகரித்து, மாலையில் நெரிசல்மிக்க நேரத்தில் 16,000 மெகாவாட்டாக உயர்ந்தது. கடும் வெப்பத்தால் ஏற்படும் புழுக்கத்தில் இருந்து விடுபட ஏர்கண்டிஷன்கள், கூலர்களின் பயன்பாடு அதிகரித்து வருவதே மின்சாரத் தேவை உயரக் காரணம்.
சென்னையில் மட்டும் 3,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் இது ஒட்டுமொத்த கேரளாவின் மின்தேவைக்கு சமமானது. இதுவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி உச்ச அளவாக தமிழகத்தின் மின்தேவை 16,845 மெகாவாட்டாக இருந்தது. தற்போது மின்சார தேவை 16,100 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் அது முந்தைய அதிகபட்ச தேவையை தாண்டி 17,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பொதுமுடக்கம் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் தொழிற்கூடங்கள், வணிக வளாகங்கள், கடைகள் முழுவீச்சில் செயல்படுவதும் மின்சார தேவை அதிகரிக்கக் காரணம் என டேன்ஜெட்கோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்போதைய மின்சார தேவையை சமாளிக்க போதிய மின் உற்பத்தி உள்ள நிலையிலும் சில இடங்களில் கூடுதல் பயன்பாட்டால் மின்மாற்றிகளில் அழுத்தம் ஏற்பட்டு மின் தடை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: வண்டலூர் பூங்காவில் பெண் வெள்ளை புலி உயிரிழப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM