மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள்தொடங்கியதில் இருந்தே சென்னை அணியில் விளையாடி வரும் தோனி, சென்னை அணியின் கேப்டனாக இதுவரையில் தனது பணியை செவ்வனே செய்துவந்தார். அவர் இதுவரை சென்னை அணிக்கு நான்கு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.