சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்டது.
வரவுசெலவுத்திட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட MF/FP/32/CM/2021/212 மற்றும் 2021 டிசம்பர் 14ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
• இலங்கை அரசாங்கத்திற்கும், துருக்கி குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கைக்கு அனுமதி
• விலங்கின நலம்பேணல் தொடர்பில் புதிய சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்
இதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் நிதிச் சேவைகளுக்கான சேர்பெறுமதி வரி 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும். இதற்கு மேலதிகமாக எந்தவொரு தொற்றுநோய் சூழல் அல்லது மக்களுக்கான அவசர சூழலின் போது அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படும் வைத்திய உபகரணங்கள், மற்றும் ஓளடத நன்கொடைகளுக்கு மாத்திரம் சேர் பெறுமதி வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படும்.
கீழ்வரும் இணைப்பின் ஊடாக இச்சட்டமூலத்தைப் பார்வையிட முடியும்
இலங்கை அரசாங்கத்திற்கும், துருக்கி குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரிவிதிப்பை நீக்குவதற்கும், வரி செலுத்தாது தட்டிக்கழித்தல் மற்றும் தவிர்ப்பு என்பவற்றைத் தடுப்பதற்குமாக செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
பாராளுமன்றம் மு.ப 10.00 மணிக்கு கூடியதுடன் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அத்துடன், 27(2) நிலையியற் கட்டளையின் கீழ் விவசாயிகள் எதிர்நோக்கும் சேதன உரப் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வண.அத்துரலியே ரத்ன தேரர், கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் கேள்வியெழுப்பினார்.
அதன்பின்னர், பொது அலுவல்கள் ஆரம்பத்தின்போது விலங்கின நலம்பேணலை ஏற்பாடு செய்வதற்கும், விலங்குகளை கொடுமைப்படுத்தலைத் தடுப்பதற்குமான விலங்கின நலம்பேணல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலத்தை கீழ்வரும் இணைப்பின் ஊடாகப் பார்வையிட முடியும்
அதன் பின்னர், 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமல் சிந்தக மாயதுன்ன, இந்நாட்டில் டின் மீன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் மீன்பிடி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். அத்துடன், இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய பெருந்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் அலுவலகத்துக்கு கடந்த 2021.09.08 ஆம் திகதி சென்ற முன்னாள் அமைச்சர் அவருடைய மூன்று பாதுகாவலர்களுடன் வந்து நடத்திய தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வடிவேல் சுரேஷ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் உட்பட சகல கள உத்தியோகத்தர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் காணப்படும் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் பி.ப 5.30 மணிவரை நடைபெற்றது. இதனையடுத்து பாராளுமன்றம் நாளை (25) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.