புதுடெல்லி: சேலம் உருக்காலை வளர்ச்சியின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பியான எஸ்.ஆர்.பார்த்திபன் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று டெல்லியில், மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங்கை நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் சேலம் உருக்காலை வளர்ச்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்தச் சந்திப்பின்போது திமுக எம்.பி பார்த்திபன் அளித்த கோரிக்கை கடிதத்தில், ”சேலம் உருக்காலையில் 60 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிலையத்தினை உடனடியாக அமைக்க வேண்டும், கரோனா பாதிப்பினால் மரணமடைந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். சேலம் உருக்காலை உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை தடையின்றி தொடர்ந்து வழங்கி, ஆலை லாபகரமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
நிர்வாக பதவி இல்லாத அனைத்து பதவிகளிலும் உள்ளூர் மக்களான சேலம் மாவட்டத்தினருக்கே பணி வழங்க வேண்டும். டிப்ளமோ முடித்து பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் பதவியின் பெயரை இளம் பொறியாளர் எனும் பெயரில், மற்ற பொதுதுறை நிறுவனங்களில் உள்ளது போல் உடனடியாக மாற்றிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது, சேலம் உருக்காலையின் இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் ஆர்.குமார் உடன் இருந்தார்.